தமிழக விவசாயிகளை கர்நாடக அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது : ஜி.கே.வாசன்

302

 

கர்நாடக அரசு தமிழக விவசாயிகளை திட்டமிட்டு வஞ்சிக்கிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் இல்லை என்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கூட மத்திய அரசு பாராமுகமாக, நடுநிலையோடு செயல்படத் தவறி வருகிறது. மேலும், தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கொடுக்க வேண்டிய கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவை மீறக்கூடிய வகையில், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது. இச்சூழலில் தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வருகின்ற போராட்டமும் பாராமுகமாக இருக்கிறது. இத்தகைய தருணத்தில் நேற்றைய தினம் கர்நாடக முதலமைச்சர் அவர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை என்று கர்நாடகாவில் மழை பெய்யும் போதே தெரிவித்திருப்பது நியாயமற்ற பேச்சு, மனிதாபிமானமற்ற பேச்சு, உண்மைக்கு புறம்பான பேச்சு.

கர்நாடக அரசு, தமிழக விவசாயிகளை திட்டமிட்டு வஞ்சிக்கிறது. இந்த எதிர்மறையான நிலைப்பாட்டை கர்நாடக அரசு மாற்றிக்கொண்டு, நடுநிலையோடு நியாயத்தின் அடிப்படையில் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடிய உடனடி நிலையை எடுக்க வேண்டும்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஆலோசனை மேற்கொண்டு அதன் அடிப்படையில் உடனடியாக கர்நாடக அரசோடு தொடர்பு கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE