ஐரோப்பிய ஒன்றியமும் புலிகள் மீதான தடையின் பின்னணி வியூகமும்.[கட்டுரை ]

874

 

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் பேரவை, தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பை­யும் பயங்­க­ர­வா­தத்­து­டன் தொடர்­பு­டைய அமைப்­புக்­கள் பட்­டி­ய­லில் 2006ஆம் ஆண்டு இணைத்­தது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்பு இதற்கு எதி­ராக ஆரம்­பத்­தில் நீதி­மன்ற நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­த­போ­தும், பின்­னர் அது தொடர்­பில் கரி­சனை காட்­ட­வில்லை.

கடந்த 11 வருடமாக தடை தொடர்கின்றது. தற்போதைய சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு ஒருபுறம் இருக்க மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியம் தீர்ப்பு பற்றி மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளது.நீதி தர்மம் ஒன்றாகவும் அரசியல் தர்மம் ஒழுங்கு வேறு ஒன்றாகவும் உள்ளது. உண்மையில் தற்போது புலிகள் இயக்கத்தின் ஆயுதப்பிரிவு இல்லை அவர்களின் ஆயுதம் மௌனிக்கப்பட்டுள்ளது. 2009.05.18 ன் பின்னர் எந்தவொரு ஆயுத நடவடிக்கையிலும் புலிகள் ஈடுபடவில்லை.

மீள் உருவாக்க நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை. இவ்வாறு இருக்கையில்தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமேயாகும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது கவலையளிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தொடர்ந்தும் புலிகள் பயங்கரவாத இயக்கமாகவே பட்டியலிடப்பட்டிருப்பர் என தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடுவதற்கு பயன்படுத்திய முறைமை குறித்தே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு காலப் பகுதி வரையிலான மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.எனினும், ஐரோப்பிய ஒன்றியம் 2015 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின் அடிப்படையில் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே பட்டியலிட்டுள்ளது.

நீதிமன்றின் தீர்ப்பு உன்னிப்பாக ஆராயப்பட்டு தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் தடை உத்தரவு குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.புலிகள் இயக்கம் தொடர்பான மாறுபட்ட விடயங்களுக்கு உண்மையான காரணம் புலி வியாபாரிகளின் கோமாளித்தனமான நடவடிக்கைகள் ஆகும்.

புலிகளின் பெயரால் உண்மைக்கும் யதார்தத்திற்கும் புறம்பாக புலம்பெயர் தேசத்தில் சிலர் சுய விளம்பரம் தேடும் முயற்சியிலும் ஈடுபடும் காரியங்களினால் தடை உத்தரவு தொடர்கின்றது.
புலிகள் இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி சேகரிப்பதும் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் போராட்டங்கள் நடாத்துவதுமே இன் பின் புலக்காரணியாகும் இதனாலேயே ஐரோப்­பிய நாடு­க­ளில், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் நிதி தொடர்ந்­தும் முடக்­கப்­பட்டே இருக்­கும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யம் வெளி­யிட்­டுள்ள சிறப்பு அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

ஐரோப்­பிய பொது நீதி­மன்­றம் 2014ஆம் ஆண்டு நடை­மு­றைக் குறை­பா­டு­கள் கார­ண­மா­கத் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் மீதான தடுப்பு நட­வ­டிக்­கை­களை நிறுத்­தி­யி­ருந்­தது. எனி­னும் எதிர்­கா­லத்­தில் நிதி­களை முடக்­கு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­களை கருத்­தில்­கொண்டு நிறுத்­தப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளின் விளை­வு­க­ளைத் தொடர்ந்­தும் பேணு­வ­தற்­குப் பொது நீதி­மன்­றம் தீர்­மா­னித்­தி­ருந்­தது.

இந்த நிலை­யில் ஐரோப்­பிய நீதி­மன்ற ஆயம், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இரா­ணுவ ரீதி­யா­கத் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அந்த அமைப்பை ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் பயங்­க­ர­வா­தத் தடைப் பட்­டி­ய­லில் ஏன் வைத்­தி­ருக்­கின்­றது என்­பதை ஐரோப்­பிய ஒன்­றிய பேரவை தெளி­வு­ப­டுத்­தத் தவ­றி­விட்­ட­தா­கக் குறிப்­பிட்­டி­ருந்­தது. இத­ன­டிப்­ப­டை­யில் விடு­த­லைப் புலி­க­ளைத் தடைப் பட்­டி­ய­லில் இருந்து நீக்­கி­ய­து­டன், நிதி­க­ளை­யும் விடு­வித்­தது.

இதன் பின்­னர், ஐரோப்­பிய ஒன்­றி­யம் வெளி­யிட்ட தெளி­வு­ப­டுத்­தல் அறிக்­கை­யில் 2011ஆம் ஆண்டு தொடக்­கம் 2015ஆம் ஆண்டு வரை­யி­லான காலப் பகு­திக்கேஇ ஐரோப்­பிய நீதி­மன்ற ஆயத் தீர்ப்பு பொருந்­தும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தது.

இதே­வேளை, ஐரோப்­பிய ஒன்­றி­யப் பேரவை 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் மற்­றும் 2017ஆம் ஆண்டு ஜன­வரி மாதங்­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­க­ளில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் நிதியை ஐரோப்­பிய நாடு­க­ளில் முடக்கி வைக்­கத் தீர்­மா­னித்­தி­ருந்­தது.

இதற்கு அமை­வாக, ஐரோப்­பிய ஒன்­றிய நீதி ஆயத்­தின் தீர்ப்­பி­னால் விடு­த­லைப் புலி­க­ளின் நிதி விடு­விக்­கப்­ப­டாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.எனி­னும் எதிர்­கா­லத்­தில் ஐரோப்­பிய ஒன்­றி­யம் மறு ஆய்வு மேற்­கொள்­ளும்­போது ஐரோப்­பிய ஒன்­றிய நீதி ஆயம் வழங்­கிய தீர்ப்பை கவ­னத்­தில் எடுக்க வேண்­டி­வ­ரும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த அறிக்கைகளின் பின்புலத்தில் அமெரிக்க நாட்டு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் காரணமாக அமைந்திருக்கின்றன. அதாவது புலிகள் இயக்கம் மீள் உருவாக்கம் நிகழ வாய்ப்பு உண்டு என அறிவித்தமை உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.

ஆனால் அமெரிக்க இத் தகவலை எவ் அடிப்படையில் வெளியிடப்பட்டது என விடையளிக்கவில்லை இங்குதான் ஒரு மயக்க நிலை உருவாகியிருக்கின்றது. சிங்கள அரசால் தமிழர் உரிமைகள் வழங்கப்பாடத்தினாலும் புலிகள் இயக்கம் மீள் உருவாக்கம் நிகழ வாய்ப்பு உண்டு என கூறப்பட்டிருக்கலாம்.

யாதெனில் இலங்கை அரசும், சிங்கள ஊடகங்களும் எடுத்ததற்கெல்லாம் இலங்கையில் நிகழும் வன்செயல்களுக்கு எல்லாம் புலிகளின் மீள் உருவாக்கம் பற்றி கதைவிடுவதும் அரசியல் தேவைகளுக்கு எல்லாம் புலிகள் மீள் உருவாக்கம் என்று அறிக்கை விடுவதும் சிங்கள மக்களை கவர்வதற்கும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் புலிகள் மீள் உருவாக்கி விட்டார்களா? என அறிக்கைகள் விடுவதும் ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது.

அரசியல் வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும், பொலிஸ் திணைக்கழகம், பாதுகாப்புப் படைகள், அரசியல் வாதிகளுக்கு எல்லாம் புலிகள் இயக்கம் தேவையாக உள்ளது.அவர்களின் வியாபாரத்திற்கு புலி சரக்குத்தான் தேவையாக உள்ளது. இல்லாத புலிகளை உருவாக்குவதும் மேற்படி கூறப்பட்டவர்கள்தான்.
2009.05.18 உண்மையில் புலிகள் இயக்கத்தின் உண்மையான செயற்பாடுகள் முடிவடைந்து விட்டன.

அதன்பின் உருவான புலிகள் இயக்கத்தின் பெயரிலான செயற்பாடுகள் அனைத்தும் இலங்கை அரசினாலும் பாதுகாப்பு படைகளினாலும் முன்னாள் போராளிகளை கைக்கூலியாக பயன்படுத்தி தோற்றுவிக்கப்பட்ட புலிச் செயற்பாடே ஆகும்.இதனை இலங்கை பாதுகாப்பு புலனாய்வு அதிகாரிகள் செய்தார்கள் மற்றும் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ செய்கிறது.

றோவின் முயற்சியிலும் புலனாய்வு நகர்விலும் சில புலி சலசலப்பு நாடகம் நடக்கின்றது. அங்கேயும் புலிப் பூச்சாண்டிகள் காட்டப்படுகின்றது.அதேவேளை அமெரிக்காவும் இலங்கையினை கையாள்வதற்கு புலி நாடகங்களை அரங்கேற்றுகின்றார்கள். இவைகள் அனைத்தும் உண்மையில் தமிழர் தரப்பால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அல்ல. புலிகளின் கொள்கையை பின்பற்றியும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையும் இல்லை.

தமிழர் தரப்புக்களை கைக்கூலியாக பயன்படுத்தி முன்னால் போராளிகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் அரசுகளின் புலனாய்வு நடவடிக்கைகள் ஆகும்.இவை அரசுகளின் இராஜதந்திர நகர்வுகளுக்காக பயன்படுத்தப்படும் சொற்பிரயோகங்கள் ஆகும். இவை புலனாய்வு உத்திகளும் தந்திரங்களும் ஆகும்.

சிங்கள மக்களின் தேவைக்காகவும் உலக ஒழுங்கிற்காகவும் 2009 பின் பல தடவை போலியாக ஆவணங்களில் புலிகள் பிறக்கின்றார்கள், அழிக்கப்படுகின்றார்கள்.
தமிழர் தரப்பிலும் சில புலி வியாபாரிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களுக்கும் தலைவர் பிரபாகரனும் புலிகள் இயக்கமும் தேவைப்படுகின்றது. இலங்கையில் MP சிறிதரன் முன்னாள் MP கட்டைக்களுத்து கஜேந்திரன் போன்றவர்களின் அரசியல் வியாபாரத்திற்காகவும் புலிகள் இயக்கம் பயங்கரவாதிகளாக காட்டப்பட காரணமாக உள்ளது.

அதேபோல் புலத்திலும் நாம் புலிகளின் வாரிசு என புகழ்மாலை சூட பதவி பட்டம் தேட புலிகளின் கொள்கையின் பெயரால் நாடகமாடும் சில கோரைப் புட்களினாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தொடரக் காரணமாகும். தமிழர் தரப்பில் தாயகத்திலுள்ள சில அரசியல்வாதிகளும் புலத்தில் உள்ள சில புலி வியாபாரிகளும் ஒன்றை விளங்க வேண்டும்.

இனி புலிகளின் பெயரால் அரசியல் செய்து தமிழ் மக்களுக்கு தீர்வு தேட முடியாது.
சர்வதேச அரங்கில் புலிகளின் பெயரை பயன்படுத்தி தமிழரின் உரிமைப் போராட்டத்தை நகர்த்தி தமிழர்களுக்கு தீர்வைப் பெற முடியாது. புலிக்கொடியும் தேசியத் தலைவரின் படமும் சுய விளம்பரத்திற்கு நன்மையே ஒளிய சர்வதேச அரங்கில் தமிழர் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவாது.

எமது இதயங்களில் பூசிக்கப்படவேண்டிய புலிக்கொடியும் தலைவரின் படமும் கௌரவமாக இருக்கட்டும். இன்றைய உலக ஒழுங்கு அரசியலுக்கு வேண்டாம்.
அதேபோல் தமிழ் அரசியல் வாதிகள் சிலரும் வாக்கு வங்கி நிரப்ப தலைவர் பிரபாகரன் இருக்கின்றார் மீண்டும் வருவார் என்கின்றனர். அதேபோல புலத்தில் நிதியை பதுக்கி வைத்திருப்போரும் தலைவர் வருவார் அங்கு பயிற்சி நடக்குது எங்கோ பொட்டமான் உள்ளார். எங்கோ தலைவர் உள்ளார். தலைவர் வரும்போது கணக்கு காட்டுவேன் காசு கொடுப்பேன் என அறிக்கை விடுவோரும் தான் புலிகள் இயக்கத்திற்கு உயிர் கொடுக்கின்றனர். புலிகள் இயக்கத்தை வாழ வைக்கின்றனர். இவர்களினால் தான் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நீதிமன்ற உத்தரவையும் மீறி புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் என அறிவிக்கக் காரணமாகிவிட்டது.

புலிகள் இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யும் தமிழர்களே நீங்களே தமிழர்களின் இழிவுக்கு காரனியாகி விடாதீர்கள். புலிகளினதும் மாவீரர்களினதும் புனிதமானதும் மாட்சின்மை பொருந்திய தியாகத்தையும் தவறாக பயன்படுத்தாதீர்கள். இதனால் உலகம் தமிழரை தவறாக புரிந்துகொள்ளும்.

ச.சங்கரன்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE