உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர், இன்று நிறைவுவிழா

375

லண்டன் : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், ஜமைக்காவை சேர்ந்த நட்சத்திர வீரர் உசேன் போல்ட் எதிர்பாராத வகையில் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. இதுவே அவர் பங்கேற்ற கடைசி 100 மீட்டர் ஓட்டம் என்பதால், அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். எனினும், ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஈடு இணையற்ற வீரராக அவரது சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய அணி வீரர், வீராங்கனைகளின் செயல்பாடு குறிப்பிடத்தக்க வகையில் அமையவில்லை. ஆண்கள் ஈட்டி எறிதல் பைனலுக்கு தேவிந்தர் சிங் காங் தகுதி பெற்றது மட்டுமே பெரிய ஆறுதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தேவிந்தர் காங் (26 வயது), தகுதித் சுற்றில் தனது கடைசி வாய்ப்பில் 83 மீட்டர் எறிய வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்கிய நிலையில், அபாரமாக 84.22 மீட்டர் தூரத்துக்கு எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் பைனலுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 48 பிரிவுகளில் தங்கப் பதக்கங்கள் பெற போட்டிகள் நடைபெற்ற நிலையில், கடைசிகட்ட நிலவரப்படி அமெரிக்கா அதிகபட்சமாக 6 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் தொடர்ந்து முன்னிலை வகித்தது. கென்யா 2வது இடத்திலும் (3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்), தென் ஆப்ரிக்கா 3வது இடத்திலும் (2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம்) இருந்தன. கடைசி நாளான இன்று ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவு 50 கிலோ மீட்டர், 20 கிலோ மீட்டர் நடை பந்தயங்கள் நடைபெறுகின்றன. இது தவிர ஆண்கள் உயரம் தாண்டுதல், 1500 மீட்டர் ஓட்டம், 4X400 மீட்டர் ரிலே இறுதிச் சுற்றுகளும், மகளிர் வட்டு எறிதல், 5000 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம், 4X400 மீட்டர் ரிலே பைனல்ஸ் நடக்க உள்ளன. பத்து நாட்களாக தடகள ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த இந்த போட்டித் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE