மட்டக்களப்பு மக்களின் வெருகல் சித்திரவேலாயுதர் ஆலய பாதயாத்திரை

517

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு ஆன்மீக பாதயாத்திரையின் இறுதி நாள் யாத்திரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கதிரவெளி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் கடந்த செவ்வாய்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாத யாத்திரை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றடைந்தது.
கடந்த செவ்வாய்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய ஆறு நாட்களை கொண்ட ஆன்மீக பாதயாத்திரை குருமன்வெளி, எருவில், பட்டிருப்பு, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேத்தாத்தீவு, செட்டிபாளையம், குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, ஆரையம்பதி, நாவற்குடா, கல்லடி, மட்டக்களப்பு, மாமாங்கம், ஊறணி, தன்னாமுனை, மைலம்பாவெளி, செங்கலடி, கொம்மாதுறை, வந்தாறுமூலை, சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, கிரான், கறுவாக்கேணி, வாழைச்சேனை, வட்டவான், மாங்கேணி, பனிச்சங்கேணி, வாகரை, கண்டலடி, பாலச்சேனை, கதிரவெளி ஆகிய பிரதேசங்களில் பிரதான வீதியிலுள்ள ஆலயங்களுக்கு சென்று தரிசித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடைந்தது.
இவ் ஆன்மீக பாதயாத்திரையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர் முதல் பெரியோர்கள் வரை அரோகரா கோசத்துடன், பஜனைப் பாடல்களை பாடியவாறும் மற்றும் கையில் நந்திக் கொடி ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் வருடா வருடம் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய உற்சவத்தினை சிறப்பிக்கும் முகமாக ஆறு நாட்கள் கொண்ட பாத யாத்திரை இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய உற்சவத்தின் இறுதி நாள் தீர்த்த உற்சவமானது இன்று திங்கட்கிழமை வெருகல் கங்கையில் இடம்பெற்றது.

– மட்டக்களப்பு நிருபர் –

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE