அரசியல் கைதிகளின் விடுதலை – ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சம்பந்தன் கடிதம்

210

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை சட்ட ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாக நோக்க வேணடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தின் பிரதிகளை பிரதமர், நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்கப் போவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் இலங்கை அரசாங்கம் உறுதி வழங்கியிருந்தது.

எனினும் அந்த உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்ற வில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

சிறைக் கைதிகளில் அனேகமானவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரேயொரு சான்று அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமேயாகும்.எனினும் அது சாதாரணமான நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான சாட்சியமாக ஏற்கப்பட மாட்டாது.

இதனால் வழக்குத் தொடுநர்களிடம் போதிய சாட்சியங்கள் இல்லாமை காரணமாக அனேக வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் குடும்பங்கள் அவர்களின் உழைப்பாளிகளின் ஆதரவு இல்லாமல் நீண்டகாலமாக வேதனையில் வாடுகின்றன.

மிகவும் காத்திரமான இம் முக்கிய விடயத்திற்கு இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என்றும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ கைது செய்யப்பட்ட ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்கள் அனைவரும் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இதேபோன்ற ஒரு கொள்கையை தற்போதுள்ள இந்தக் கைதிகள் விடயத்திலும் செயற்படுத்த முடியாமலிருப்பது ஏன் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது என எதிக்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்குகள் முழுமையாகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவையென்பதாகக் கருத முடியாது.

அவை அரசியல் அடையாளங்களையும் கொண்டிருப்பதனால் அவை முழுமையாகச் சட்டம் சம்பந்தப்பட்டவையென்று கருதிவிட முடியாது.

எனவே இந்த விடயத்தை அரசியல் ரீதியாகவும் நோக்க வேண்டிய கடப்பாட்டை உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக்கூறியுள்ளார்.

இந்த விடயம் அரசியல் ரீதியாகக் கையாளப்படாமலிருப்பது இன இணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நன்மதிப்பையும் அமைதி நிலைமையையும் மீள ஏற்படுத்துவதிலும் வலுவான தடையாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில வழக்குகள் வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு இடமாற்றப்பட்டதன் மூலம் சிலதேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அவசியமாயின் வழக்குகளை இடமாற்றம் செய்யாமல், சாட்சிகளுக்கான பாதுகாப்புக்களை வழங்கியிருக்க முடியும்.

இந்த நிலையில்இ தமிழ் அரசியல் கைதிகள் மேலும் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE