4 ஓட்டங்களால் உலக சாதனையை தவறவிட்ட தென்னாபிரிக்க அணி

1759

சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 10 விக்கட்டுக்களால் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சில் வெற்றிப்பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களைப்பெற்றது.

முஸ்பிகுர் ரஹீம் 110 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, 279 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 42.5 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 282 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

இது தென்னாப்பிரிக்க அணி ஒரு நாள் போட்டிகளில் பெற்ற மிகச்சிறந்த இணைப்பாட்டமாக பதிவானதுடன், 10 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்ற முதல் சந்தர்ப்பமாகவும் அமைந்தது.

துடுப்பாட்டத்தில் குயின்டன் டி கொக் 168 ஓட்டங்களையும், ஹசிம் அம்லா 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற ரீதியில் தென்னாபிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது.

இதனிடையே, இலங்கை அணியின் ஆரம்ப ஜோடியான சனத் ஜெயசூரிய மற்றும் உபுல் தரங்க ஆகியோர், ஆரம்ப விக்கட்டுக்காக 286 ஓட்டங்களை பெற்றதே உலக சாதனையாக இருக்கின்றது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் குயின்டன் டி கொக் மற்றும் ஹசிம் அம்லா 282 ஓட்டங்களை பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக பெற்றனர்.

மேலும் நான்கு ஓட்டங்கள் பெற்றிருந்தால் இலங்கை ஜோடியின் உலக சாதனையை முறியடித்திருக்க முடியும். என்றாலும் இந்த வாய்ப்பு தென்னாபிரிக்க ஜோடிக்கு கிட்டாமல் போனமையும் குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE