அக்கரையில் போராடும் மக்களுடன்-செந்திவேல் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

1498

அக்கரையில் போராடும் மக்களுடன் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி. கா. செந்திவேல் சந்திப்பு

அக்கரை கடற்கரையில் இருக்கும் சுற்றுலா மையத்தை அகற்றி அதைச் சிறுவர் விளையாட்டுத் திடலாக மாற்றம் செய்யுமாறு கோரி 30 நாட்களையும் தாண்டி நீராகாரம் மாத்திரம் உட்கொண்டு உணவுத் தவிர்ப்புத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களைக் கடந்த 19.10.2017 அன்று  புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி. கா. செந்திவேல் அவர்கள் சந்தித்து உரையாடியதுடன் குறித்த சுற்றுலா மையத்தையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து அம்மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அவர், அக்கரையில் போராடும் மக்களுடைய கோரிக்கை நியாயமானது. தமது கிராமத்தில் சுற்றுலா மையம் இருக்க வேண்டுமா? இல்லையா? என்பதை அம் மக்களே தீர்மானிக்க வேண்டும்.

பாதுகாப்போ, கட்டுப்பாடுகளோ எதுவுமற்ற இச் சுற்றுலா மையத்தின் இருப்பானது, குறைந்தளவு சனத்தொகையினரைக் கொண்டதான அக்கரை கிராம மக்களின் வாழ்வைப் பெரிதும் அச்சுறுத்துகின்ற ஒன்றாக இருப்பது உரிய தரப்பினரால் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

தமிழ்த் தலைமைகளால் ஆளப்படுகின்ற வடக்கு மாகாண சபையானது இதுபோன்ற தமிழ் மக்களின் சிறிய சிறிய பிரச்சனைகளைக்கூடத் தீர்ப்பதில் அக்கறையற்றதாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. இங்கு போராடும் மக்களுக்கு எதிராக அவதூறான கருத்துக்களைச் சில அரசியல்வாதிகள் பரப்பி வருகின்றனர்.

இத்தகைய அவர்களின் செயற்பாடு போராடும் மக்களுக்குப் புதிதானதொரு விடயமல்ல. ஏனெனில் காலத்துக்குக் காலம் இத்தகைய அரசியல் வாதிகள் மக்கள் போராட்டங்களின்மீது இவ்வாறான சேறுபூசும் செயற்பாடுகளைச் செய்துகொண்டே வருகின்றார்கள். இவர்கள் இக் கைங்கரியங்கள் மூலம் உறுதியோடு நியாயத்திற்காகப் போராடும் மக்களைச் சோர்வடைய வைத்துவிட முடியாது.

எனவே, வலி கிழக்குப் பிரதேச சபையும், வடக்கு மாகாண சபையும் இவ்விடயத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என எமது கட்சி கேட்டுக்கொள்கின்றது.

எமது கட்சி நியாயமான கோரிக்கையை முன்வைத்துப் போராடுகின்ற உங்களுடன் என்றும் உறுதுணையாக நிற்கும் எனத் தெரிவித்தார்.

-யாழ் நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE