கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள்- 8 பேர் பலி

1134

நாகப்பட்டினத்தில் அரசு போக்குவரத்து பணிமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் எட்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது.

இந்த பணிமனை கட்டி கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் ஆன நிலையில் இன்று அதிகாலை திடீரென பணிமனை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
பணிமனையில் தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை என்பதால் பலி எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது, ஏற்கனவே பலமுறை பணிமனையை சரிசெய்யக்கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பொறையார் கிராமத்தில், அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பணிமனை இன்று அதிகாலை இடிந்துவிழுந்ததில், கட்டடத்துக்குள் இருந்த நாகப்பட்டினம் மாவட்டம், மணக்குடியைச் சேர்ந்த கனி, காலமநல்லூரைச் சேர்ந்த மணிவண்ணன், கீழகாசாக்குடியைச் சேர்ந்த தனபால், காளஹஸ்தினாபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன், பாலு, கீழையூரைச் சேர்ந்த சந்திரசேகர், சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும் கீழப்பெரம்பூரைச் சேர்ந்த முனியப்பன் ஆகிய எட்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

போக்குவரத்துக் கழகப் பணிமனை இடிந்துவிழுந்து, உயிரிழந்த எட்டு பணிமனை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் சம்பவத்தில், மூன்று நபர்கள் காயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தம் அடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் இவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவர்கள், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE